சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ.நாளை விசாரணை!

Print yarlcine.com in சினிமா செய்திகள்

நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ, நாளை (திங்கட்கிழமை) முதல் விசாரணையை  ஆரம்பிக்க உள்ளது.பிரபல  தொலைக்காட்சி நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி,  பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஹோட்டலில்  தற்கொலை செய்து கொண்டார்.அவரது  இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர். சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.இதற்கிடையே பிரேத பரிசோதனையில், நடிகை சித்ரா தற்கொலை செய்துதான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.இதனைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை  பொலிஸார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.இதனால் சித்ரா இறப்பதற்கு முன்பு என்ன மனநிலையில் இருந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் பொலிஸார் புலம்பி வருகிறார்கள்.சித்ரா பயன்படுத்திய கையடக்க தொலைபேசியை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று பொலிஸார் எதிர்பார்த்து காத்துள்ளனர்.சித்ராவுக்கும் – ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் அடுத்த மாதம்தான் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர்.ஆனால் அவர்கள் கடந்த ஒக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து இருப்பதாக ஹேம்நாத் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை என்றும் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே சித்ராவும் ஹேம்நாத்தும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை சித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று பொலிஸாரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.இதனால், இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் இன்று 5ஆவது நாளாக விசாரணை நடத்த பொலிஸார் முடிவு செய்து உள்ளனர்.இதேபோன்று  ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து சித்ராவின் உடலை எடுத்து சென்ற தனியார் வைத்தியசாலை ஆம்புலன்ஸ்  சாரதியிடம் இன்று பொலிஸார் விசாரணை நடத்துகிறார்கள். இதில் ஏதாவது முக்கிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.திவ்யஸ்ரீ, நாளை முதல் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளார். முதலில் அவர் சித்ரா- ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.