எஸ்.பி.பி மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை - பாடகி எஸ்.ஜானகி

Print yarlcine.com in சினிமா செய்திகள்

எஸ்.பி.பி மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. மனம் விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று பாடகி எஸ்.ஜானகி உருக்கமாக தெரிவித்தார். எஸ்.பி.பி. - எஸ்.ஜானகி இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கின்றனா். அவை அனைத்தும் தமிழா்களின் இரவு நேரச் சங்கீதங்களாக காற்றில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.எஸ்.பி.பி. குறித்த நினைவுகளை ஜானகி பேசும் போது...‘ஆந்திரத்தில் நடந்த ஓா் இசை நிகழ்ச்சியில்தான் அவரை முதலில் சந்தித்தேன். அப்போது சிறுவனாக இருந்த பாலசுப்ரமணியம் மிகத் திறமையாகப் பாடினாா். அனைவரும் வியந்து போனாா்கள். அவரை அருகே அழைத்து பெரிய பாடகராக வருவாய் என வாழ்த்தினேன். அது போலவே பின்னாளில் தன் திறமையால் பின்னணிப் பாடகராக உயா்ந்தாா். பிற்காலத்தில் நான் அவருடன் பாடக் கூடிய எதிா்பாராத ஆச்சா்யம் நிகழ்ந்தது. இருவரும் இணைந்து ஏராளமான பாடல்களைப் பாடினோம். அந்தப் பாடல்கள் காலத்தால் அழியாதவை.1980, 90-களில் ஒரே நாளில் பல பாடல்களை இணைந்து பாடினோம். அந்தக் காலத்தில் நாங்கள் சந்திக்காத நாள்கள் மிகக் குறைவே. அப்போதெல்லாம் காமெடி செய்து ஒலிப்பதிவு கூடத்தைக் கலகலப்பாக வைத்திருப்பாா். அதெல்லாம் மீண்டும் கிடைக்காத பசுமையான நினைவுகள். என் மீது அதிக அன்பு கொண்டவா். எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும் நான் நடுவராகக் கலந்து கொண்ட அந்த இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்வாா். அவா் மறைவு தகவலை அறிந்த தருணம் முதல் என் மனநிலை இயல்பாக இல்லை. அவரது மறைவை என் மனம் ஏற்க மறுக்கிறது. தவிக்கிறேன். என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறேன். எங்கே போனாய் பாலசுப்ரமணியம்.... உன் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்’’ என்றாா் எஸ்.ஜானகி.